வாசகர், வாசிப்பு, வாசிப்புக் கூடம்
மோ. பார்வதி, நூலக உதவியாளர்,
திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
அரக்கோணம்
முன்னுரை:
உலகம் உருவான நாள் முதலே மொழி என்பது தோற்றம் பெற்றது. மொழியின் மூலமே மனிதன் தனது எண்ணக் கருத்துக்களைப் பரிமாறவும், வெளிக் கொணரவும் பழகினான். அப்படியான மொழி ஆரம்பக்காலத்தில் ஒலி மற்றும் சமிக்ஞை மூலம் பரவலாயின. அம்மொழியில் வாசிப்பு என்பது மிகவும் இன்றியமையாததாகக் கருதப்பட்டது. ஒரு நாட்டில் குற்றங்கள் குறைந்து சிறைச்சாலைகள் மூடப்பட வேண்டுமானால் நூலகங்கள் பல திறக்கப்பட வேண்டும். மனித நாகரீகம் உயர்வடைவதற்கு கல்விதான் அடிப்படை. அக்கல்வி எழுத்துவடிவிலான புத்தகங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைய உதவுவதே நூலகம்.
'நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு'
என்றார் ஓளவையார். நாம் எவ்வளவு நூல்களை கற்கிறோமோ நம் அறிவும் அதற்கேற்றால் போல் வளரும். நாம் நம் தலைமுறைக்கு நமது தாய்மொழியோ அல்லது பிற மொழிகளையோ கொண்டு செல்ல நூல்கள் ஒன்றே சிறந்த கருவி. திருவள்ளுவர் தனது
திருக்குறளில் கல்வி (அதிகாரம் 40) க்கென்று தனியொரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். இதிலிருந்தே கல்வியின் அதாவது கற்றலின், வாசித்தலின் பெருமையை நாம் உணரலாம்.
வாசகர்:
மானுட நாகரீகம் உயர்வடைவதற்கு அச்சமுதாயத்தில் தலைச் சிறந்த சிந்தனையாளர் தேவை. சிந்தனையாளர்கள் உருவாக கல்வி ஓர் பாதையாக அமைகிறது.
கேடிஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றவை யவை – (குறள் 400)
அழிவில்லாத சிறந்த செல்வம் ஒருவருக்கு கல்வியே ஆகும், கல்வி அல்லாத மற்ற செல்வங்கள் ஒருவருக்கு சிறந்த செல்வம் ஆகாது என்று கல்வியின் பெருமையை வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகிறார். இத்தகைய கல்வியறிவு பெற்றவர்கள் தங்களது அறிவைப் பெருக்கிக் கொள்ள புத்தகங்களை படிக்கின்றனர். அவ்வாறு வாசிப்பு பழக்கம் உடையவரே வாசகராவார். இவரே ஒரு சிறந்த படைப்பாளியாக வர முடியும். பொதுவாக வாசகர் தன் கையில் கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் (எழுத்து வடிவில்) படிக்கத்தவறுவதில்லை. உதாரணமாக செய்தித்தாள் துண்டில் மடித்து தந்த கடலையை சாப்பிட்ட பிறகு, அந்த தாளில் உள்ள செய்திகளை வாசிக்கவோ அல்லது பார்க்கவோ வாசகர் தவறுவதில்லை. தனக்கு தெரிந்த கல்வியறிவிற்கேற்றே நூல்களை தேர்ந்தெடுத்து வாசிப்பதோடல்லாமல், தனது அறிவைப் பெருக்கிக்கொள்ளத் தனக்கு கடினமாக புத்தகங்களையும் வாசித்து பழக்கி கொள்ள நினைப்பவர் வாசகர். இவர் தமக்கு தேவையான பயனுள்ள நூல்களை (புத்தகங்களை) தேடிச் சென்று படிப்பதோடல்லாமல் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற சான்றோர் கூற்றிக்கிணங்க தாம் படித்த நூலைப் பலருக்கும் கொண்டுச் சேர்க்கின்றார்.
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள், அவனே எனது வழிகாட்டி என்கிறார் ஜீலியஸ் சீசர்
வாசகர் புத்தகம் மட்டுமல்லாது தினப் பத்திரிக்கைகள், வாரப் பத்திரிக்கைகள், மாதப் பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றையும் வாசித்துச் செல்கின்றனர் எனவே தான் நூலகம் 'வாசக சாலை' என்னும் பெயர் கொண்டும் அழைக்கப்படுகிறது. காகிதமல்லாத தகவல் தொடர்பு சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி போன்றவையும் வாசகர்களை தன் பக்கம் வைத்துள்ளது.
நூல்களை எழுதுபவனின் (எழுத்தாளர்) எழுத்துக்களுக்கு உயிர் கொடுப்பவன் வாசகன். வாசகர்களால் மட்டுமே ஓர் நூலை காலம் கடந்து எடுத்து சென்று அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போய் சேர்க்க முடியும் இதற்கு நல்லதொரு சான்று திருக்குறள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிச்சென்ற திருக்குறள் இன்றும் சக்திவாய்ந்த உலகப் பொதுமறையாக கருத்தப்படுமேயானால் அதற்கு வாசகர்களே முக்கிய காரணம்.
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் - ஆபிரகாம் லிங்கன்
அச்சிட்ட காகிதங்கள், புத்தகங்களாகின்றன, அவை வாசகர் கையில் சரியாக சேர்ந்து வாசிக்கப்பட்டால் மட்டுமே அந்நூல் படைப்பிற்கான அங்கீகாரம் பெறுகின்றது. விற்பனை அற்ற நூல்கள் அல்லது வாசகரற்ற புத்தகங்கள் வெறும் தூசு படிந்ததாக மட்டுமே இருக்கும். நல்ல வாசகர்கள் உருவாக வேண்டுமெனில் அறிவார்ந்த, சிறந்த மொழிநடை உள்ள நூல்கள் உருவாக வேண்டும். வாசகர்களை கவரும் வண்ணம் சொல் நயம், உவமைகள், வாக்கியங்கள் அமைத்து நூல்கள் எழுத்தப்பட வேண்டும்.
பொதுவாக கதைகள், கவிதைகள், புதினங்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்றவற்றிற்கு வாசகர் பட்டாளம் அதிகம். ஆசிரியர்களுக்கு (எழுத்தாளர்) அடிமையான வாசகர்களும், படைப்புக்களுக்கு பலியான வாசகர்களும் இங்கே உண்டு. வாசகன் விரும்பினால் அவருக்கு பிடித்த நூலை ஆயிரம் முறை வேண்டுமானாலும் வாசிப்பான். பிறருக்கும் அந்நூலை கொண்டு போய் சேர்ப்பான்.
'ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்
வாசகன் அதனை முடித்து வைக்கிறான்' என்கிறார் சாமுவேல் ஜான்சன்.
வாசகர் பொதுவாக மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதும், சோகமாக இருக்கும் பொழுதும் அல்லது பொழுதுபோக்கிற்காகவும் புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர்கள். பல புத்;தகங்களை படித்தவன் ஒரு புத்தகம் எழுதுகின்றான்.
வாசிப்பின் முக்கியத்துவம்:
ஓவ்வொரு மனிதனுக்கும் கற்பனை என்பது அவசியமானது. துகவல்களை பெறுவதற்கு முக்கியமான வழி வாசிப்பு. புத்தகம் படிப்பதும் கூட ஒரு வகையான தியானம்தான்.
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
- சிக்மண்ட் ஃப்ராய்ட்
அதாவது, படிக்கும் போது தன்னை மறத்தல், ஆழ்ந்து படித்தல், மனம் நிம்மதி அடைதல் போன்ற செயல்கள் நிகழ்கின்றன. வாசிக்கும் பழக்கமுடையோர் பெரும்பாலும் பேருந்து, தொடர்வண்டி, நூலகம், பூங்கா, கழிவறை, பூஜையறை போன்ற இடங்களில் புத்தகங்களை பொதுவாக வாசிப்பர். பல திரைப்படங்கள் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே எடுத்துக்காட்டாக பரதேசி என்ற தமிழ் திரைப்படம் ரெட் டீ பி ஹச். டானியல் எழுதிய கதையே. இது ஓர் நல்ல வாசிப்பிற்கு சான்று.
போதும் என்று நொந்து போய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு - இங்கர்சால்
வாசிப்பு என்பது ஓர் அற்புதக் கலை, நல்ல நூல்களைப் படிப்பதும் நல்ல வாசிப்பே. ஒருமுறை பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடி கொண்டிருக்கும் போது அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறுவை சிகிச்சைக்காக நாள் குறித்த போது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் மீதம் இருப்பதால் அதனை முடிக்கும் வரை உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்னாராம். இதிலிருந்தே வாசிப்பின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.
வாசிப்பின் பயன்:
எழுத்துக்களை காணும் நிலையே வாசித்தலின் ஆரம்பமாகும். எனவே தான், தொடக்கக் கல்வி முறையில் பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் மனப்பாடம் செய்யும் முறையை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பழக்கினர். பொதுவாக வாசிப்பு மௌனமாக வாசித்தல், உரக்க வாசித்தல் என இருவகைப்படும். வாசிப்பதனால் நம்முடைய மொழித்திறன் விருத்தியடைவதோடு, சொல்லாண்மையும் பெருகும், தனிநபரின் நினைவாற்றல், கற்பனை திறன் வளரவும் வாசிப்பு உதவுகிறது. வாய்விட்டு வாசித்தாலோ அல்லது மௌமாக வாசித்தாலோ அது நம்முடைய கண்ணால் காணப்பட்டு நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் நமக்கு மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கிறது. மேலும் கண்ணால் காணுவதை மூளையானது அறிந்து பொருளுணரும் போது வாசித்தல் நிகழ்கிறது. வரி வடிவத்திலுள்ள சொற்களை ஒலி வடிவமாக மாற்றி உச்சரித்தல். உள்ளம், கண், காது, மூக்கு, நா, குரல், ஆகிய உறுப்புகள் ஒத்துழைப்புடன் வாசிப்புத்திறன் ஆரம்பமாகின்றது. உண்மையான வாசகன்இ வாசிப்பதை முடிப்பதே இல்லை! - ஆஸ்கார் வைல்ட். முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் 12 மணி நேரம் படிப்பாராம்.
வாசிப்புப் பழக்கம் குறைந்ததற்கான காரணம்:
வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது என்கிறார் பிரான்சிங் பேகன். ஆனால் இன்று எழுத்தாற்றல் குறைவுக்கு முக்கிய காரணம் வாசிப்புத்திறன் குறைவே, தற்போதைய கல்வி முறை முற்றிலும் வாசிப்பு பழக்கத்தை குறைத்து விட்டது. தேர்வுக்குத் தேவையானவைகளையே பள்ளியிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். அவர்கள் பாடப்புத்தகம் அல்லாத பிற நூல்களை வாசிக்கச் சொல்லவோ? அல்லது நூலகம் செல்ல அனுமதிக்கவோ விடுவதில்லை?. பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் நூலகங்கள் வெறும் புத்தகங்களை சேகரிக்கும் இடமாகத் தான் இன்றளவும் உள்ளது. நூலகர்கள் அவர்களது பணியினை விடுத்து மற்ற ஏனைய பள்ளி மற்றும் கல்லூரி அலுவலகப் பணிகளை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பது வேதனையான உண்மை.
மேலும் வாசிப்பு பழக்கம் இப்பொழுது வெகுவாக குறைந்து வருகிறது. தொலைகாட்சி வந்தவுடன் குறிப்பாக கேபிள் தொலைகாட்சி வந்தவுடன் மக்களிடையே படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைவரும் கணிணியின் வசம் மாறி வாசிப்புக் கூடங்களுக்கே செல்வதில்லை. தற்பொழுது படித்தவர்களில் 10 விழுக்காடு மக்கள் கூட நூலகங்களுக்கு வருவதில்லை அதிலும் ஒரு விழுக்காடு மக்கள் கூட உறுப்பினர்களாக இல்லை என்பது வெட்கக்கேடு.
வாசிப்புப் பழக்கம் உருவாக:
வாசிப்பு என்பது நம் வாழ்வின் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். எப்படி அடிப்பைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவைகளோ அதனைப் போலவே வாசிப்பு நான்காவது அடிப்படைத் தேவையாக மாறவேண்டும். வாசிப்பு வாழ்க்கைக்கான ஊட்டம் என்பதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் போது குழந்தைகளின் ஆரோக்கியமான மன வளர்ச்சிக்கான சாத்தியங்கள் கூடுகின்றன. வாழ்வில் வெற்றி பெற்ற பலருக்கு வாசிக்கும் பழக்கம் இன்றியமையாத ஒன்றாக இருந்திருக்கிறது. அதற்கான சில வழிகள்:
1.
தினமும் குழந்தைகளுக்கு ஒரு நூலில் இருந்து ஒரு பக்கம் வாசிக்க சொல்லலாம் அல்லது பெற்றோர் வாசித்தும் காட்டலாம்.
2.
நம்மைச் சுற்றி புத்தகங்கள் இருக்குமாறும், நம் கண்ணில் புத்தகங்கள், செய்தித்தாள்கள் படும்படியும் வைக்கலாம்.
3.
புத்தகங்களுக்கென்று தனி அலமாரி அமைக்கலாம்;, முடிந்தால் தனி அறை கூட அமைக்கலாம்.
4.
வாரமிருமுறையாவது நூலகம் (வாசிப்புக் கூடம்) செல்லலாம்.
5.
பிள்ளைகளை பாராட்டி புத்தகங்களை பரிசாக அளிக்கலாம்.
நூலின் பெருமை:
நூல் அல்லது புத்தகங்களைப் படித்தால் அறிவு பெருகும் என்ற உணர்வு பொதுவானது அதுமட்டுமன்றி அது ஆன்மாவையும் தூய்மையாக்கும். நூலறி புலவ – என திருமுருகாற்றுப்படையும், 'நூலோர் புகழ்ந்த' எனப் பெரும்பாணாற்றுப் படையும் கூறுகின்றன. நூவலப்பட்டது – நுவல்வது – நூல் ஆயிற்று. இது ஒரு உயிர்ப்புள்ள மிக நுட்பமான கருவி. குறிப்பிட்ட உருவில், கையாள வசதியாய், இடம் பெயர ஏதுவாய், கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
மிகுல் (Miguel de
Cervantes) செர்வாண்டஸ், ஸ்பானிஷ் எழுத்தாளர் கர்கிலாஸ்கோ இன்கா டெட்டாவேகா (Garcilasco
Incadetavega) வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற
மூன்று புகழ்பெற்ற எழுத்தாளர்களின் காலம் 1539-1616. இவர்கள் மூவரும் ஏப்ரல் 23ம் தேதி இறந்தனர். அதிலிருந்து 1616 ஆம் ஆண்டு அனைத்துலக நூல் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. 1996 முதல் ஏப்ரல் 23 ஆம் நாள் உலக நூல் நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக் கூடாது புத்தகங்கள் தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். ஒரு காலத்தில் பரிசாக மற்றவர்களுக்கு கொடுக்க தேர்ந்தெடுப்பது நல்ல புத்தகங்களையே. எப்பொழுதோ நிகழ்ந்த நிகழ்வுகளை நம் கண்முன்னே கண்ணாடிப் போல் காட்டுவது புத்தகங்களே!.
'உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்' என்றார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ.
வாசிப்புக்கூடம்:
'தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு'- (குறள் – 396)
நீரைச் சுரப்பது மணற்கேணி அதேபோல் அறிவைப் பெருக்குவது நூல்கள். அவ்வாறான நூல்களைப் படிக்க (வாசிக்க) வேண்டும் என விரும்புகின்றவர்களுக்கு நூல்களைக் கொடுத்து வாங்கும் அமைப்பு வாசிப்புக் கூடம் அல்லது நூலகம். பொதுவாக, நூலகங்களில் நூற்களைப் பேணும் வழக்கம் இருந்திருக்கிறது.
நூலகம் (Library) என்ற வார்த்தை லிபர் (Liber) என்ற லத்தீன் சொல்லிலிருந்து தோன்றியது. நூலகம் ஆங்கிலத்தில் புத்தகங்கள் படிப்பதற்காகச் சேர்த்து வைத்திருக்கும் இடத்தை குறிக்கவே பயன்பட்டது என்பதை ரோமன் தத்துவவாதி போ எத்தியஸ் மற்றும் ஜியோபிரே சாசர் (1374) இல் விளக்கியுள்ளனர். நூலகங்கள் பிரஞ்ச் மொழியில் லிப்ரய்ரி (Librairie) என்றும், இரஷ்யாவில் பிபிளியோடெகா (Biblioteka) என்றும், இத்தாலி மற்றும் ஸ்பானிஸில் பிப்ளியோடிகா (Biblioteca) என்றும், ஜப்பானியர்கள் தோஷா-சிட்ஸ்சு (to sho-shitsu) என்றும் அழைக்கப்பட்டது. நூற்கள் களிமண் பலகைகள் (Clay tablet), கோரைப்புல், விலங்குகளின் தோல் போன்றவற்றால் எழுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
15 ஆம் நூற்றாண்டில் ஒரு அறையிலோ அல்லது பல அறைகளிலோ வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இருக்கும் இடத்தை நூலகம் என்றழைத்தனர். எல்லா நூலகங்களுமே சேகரித்து வைத்துள்ள புத்தகங்களைப் பாதுகாப்பதையே தலையாய கடமையாகக் கொண்டிருந்தன. பின்னர் மக்களுக்கு (வாசகர்களுக்கு) உதவுவதே தங்கள் பணியாகக் கொண்டனர். நூலகம், கட்டிட அமைப்பு முதல் அதன் செயல்பாடுகள் வரை ஒவ்வொரு காலக் கட்;டத்தில் இருந்து மாறுபட்ட பிரச்சனைகள் பல கடந்து வளர்ந்து இன்று தகவல்கள் மையம் என்றழைக்கப்படுகிறது.
'உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா,
ஒரு நூலகத்துக்குச் செல்' - டெஸ்கார்டஸ்
மிகமிகப் பழைய காலத்தில் ஆவண அறை (record room) க்கும் நூலகத்திற்கும் அதிக வேறுபாடு இருந்ததில்லை. ஆவணங்கள் தோன்றிய காலத்திலிருந்தே நூலகங்களும் இயங்கி வந்துள்ளன. பண்டைய காலக் கிரேக்கக் கோவில்களில் பெரிய நூலகங்கள் இருந்ததாகத் தெரிகிறது. நிறுவனங்களில் நூலகம் ஏதென்ஸ் நாட்டில் கி.மு 4-ஆம் நூற்றாண்டில் துவக்கப்பட்டது. எந்த ஒரு நாட்டில் வளமை இல்லையோ அங்கு நூலகம் இருக்கவில்லை. அக்காலத்தில் நூலகம் வைத்திருப்போர்க்கு மிகப் பெரிய மதிப்பு இருந்துள்ளது. நூலகம் வைக்காதவர்களைப் பண்பாடற்றவர்கள் என்றும் அழைத்தனர்.
முடியாட்சி காலத்தில் புத்தகங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்பட்டன. வாசிப்பதற்கும், படிப்பதற்கும் மன்னர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். புத்தகங்கள் இரவலாகப் பெற்றுக் கொள்ளும் முறையும் இருந்துள்ளது. கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் செயி;ண்ட் ஜார்ஜ் கோட்டையின் உள்ளே ஒரு நூலகம் வைத்திருந்தனர். ஏறத்தாழ 1820 ஆம் ஆண்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டதாக தெரிகிறது. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியாது உப்பத்து அகமே வைப்பர் என்கிறது ஒரு பழம்பாடல்.
'யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு' (குறள்-397)
என்ற
வள்ளுவர் மொழிக் கொண்டு நல்ல நூல்களை நாளும் கற்று நல்லுயர்வு பெற 'சீனி உள்ள இடத்தினைத் தேடி ஊரும் எறும்பு' போல் நல்ல நூல்கள் பல உள்ள நூலகத்தை தேடிச் சென்று படிக்க வேண்டும். நூலகம் ஒரு செய்திக் கிடங்கு, நூற்களின் பழமை கி,மு வில் செல்கிறது. உலகின் எல்லா நாடுகளிலும், நூலகங்களில் நூற்களைப் பேணும் வழக்கம் இருந்திருக்கிறது. அக்காலங்களில் படையெடுப்பின் போது நூல்களை மதித்து பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் முதன்மையானோராவர். அரண்மனை நூலகத்தில் நூல்களை சேகரித்து வைத்த அக்பர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லி கேட்தன் விளைவாக சமயப் பொறை மிக்க சான்றாளராகவும், சான்றோனாகவும் விளங்கினார்.
ஒருமுறை எட்டைய புரம் மகாராஜாவுடன் சென்னை சென்ற பாரதியார், மனைவியிடம் உனக்கு தேவையான சாமான்களை வாங்கி வருகிறேன் என்று கூறிச் சென்று, வரும் போது கொண்டுச் சென்ற பணத்தில் மூட்டை மூட்டைகளாக புத்தகங்களை வாங்கி வந்தாராம், தன் மனைவியிடம் அழியும் பொருளைக் கொடுத்து அழியாத செல்வத்தை கொண்டு வந்துள்ளேன் செல்லம்மா என்றாராம். இதிலிருந்தே புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.
வாசிப்புக் கூடத்தின் நன்மை:
உங்கள் மனதுக்குப் பிடித்த இன்ப மயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள்
என்று ஆப்ரகாம் லிங்கன் அவர்களிடம்; கேட்டபோது அவர் உடனே நூலகம் என்று பதிலளித்தாராம். நூலகம் அறிவை வளர்ப்பதோடு, நாட்டின் நடப்புகளைப் புலப்படுத்த உதவுகிறது, பழைய செய்திகளை அறிய உதவுகிறது. மேலும் எல்லா நூற்களையும், எல்லா பத்திரிக்கைகளையும், சிறு இதழ்களையும், பருவ இதழ்களையும் ஒருவர் தனியாக வாங்க முடியாது. இவற்றை நூலகம் வழி பெறுவது சுலபம். இன்றைய நிலையில் ஒலி, ஒளி இணைய வசதிகள் மூலம் பொது அறிவைப் பெற எளிதாக இருந்தாலும் அதை எல்லோரும் பெற முடியாது. எனவே, நூலகத்தின் தேவை இன்னும் இருக்கிறது.
'புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே! என்றார் லெனின்
வாசிப்புக் கூடங்கள் சாதி, மத, இன வேறுபாட்டற்ற ஓர் இடம். இக் கூடங்களில் எல்லா மதத்தினரும், சாதியினரும் ஒன்றாக கலந்து தங்கள் அறிவை பெருக்கி கொள்கின்றனர். அங்கு வாசித்தல் ஒன்றே பிரதானம்.
வாசிப்புக்கூட கட்டிடங்கள்:
வாசிப்புக் கூடங்கள் பொதுவாக வெளிச்சமாகவும், நல்ல காற்றோடமுடனும் இருக்க வேண்டும். படிப்பதற்கு (வாசித்தலுக்கு) ஏற்ற சூழ்நிலை நிலவ வேண்டும். வாசகர்கள் சென்று வர ஏற்றாற் போல் நகரின் அல்லது ஊரின் மத்தியில் பொது நூலகங்கள் இருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களில் உள்ள நூலகங்களின் கட்டிட அமைப்பு மாற்றுத் திறனாளிகளும் பயன்படும் வகையில் இருத்தல் வேண்டும். வாசகர்களுக்கு குடிநீர் வசதியும், கழிவறை வசதியும் கட்டாயமாக வாசிப்புக் கூடங்களில் அமைக்க வேண்டும். வாசிப்புக் கூடங்களில் உள்ள புத்தகங்கள் துறைவாரியாகவும், தலைப்புகள் வாரியாகவும் மற்றும் மொழி வாரியாகவும் பிரித்திருந்தல் அவசியம்; இதனால் வாசகரின் தேடுதல் நேரம் குறைந்து அவர்கள் எளிதாக தகவல்களை பெற முடியும் இதனையே எஸ். ஆர். இரங்கநாதன் நூலகத் தந்தை தமது நான்காவது விதியான “Save the time of
the reader” என்கிறார். நூலகரோ அல்லது நூலக உதவியாளரோ வாசகர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்க கடமைப்பட்டவர். தமது நூலகத்திலோ அல்லது பிற நூலகங்களின் வாயிலாகவோ வாசகர்களை திருப்தி செய்ய வேண்டியது இவரின் பணிகளின் மிக முக்கியமானது. நூலகம் என்பது தற்போதைய நவீன கால தொழிற்நுட்பங்களின் விளைவாக தகவல்களை தரும் மையமாக புதிய தொரு பரிணாமம் பெற்று தனது பயணத்தை தொடர்கிறது.
வாசிப்புக் கூடத்தின் பகுதிகள்:
1. நூல்
சேமிப்புப் பகுதி
2. பயனர் இருக்கைப் பகுதி
3. பணியாளர் வேலைப் பகுதி
4. கூட்டங்களுக்கான பகுதி
5. சிறப்பு பயன்பாடுகளுக்கான பகுதி
6. பிற பகுதிகள்
வாசிப்புக்கூடங்களின் வகைகள்:
1. தேசிய நூலகம்
2. பல்கலை கழக நூலகம்
3. பொது
நூலகம்
4. சிறப்பு நூலகம்
5. பள்ளி நூலகம்
6. தனியார் நூலகம்
7. ஆவணக் காப்பகங்கள்
என வாசிப்புக் கூடங்கள் பல்வேறு வகையாக பிரிந்து செயல்படுகின்றன.
முடிவுரை:
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், ஆனால் வாசிப்பு பழக்கம் தாயின் வயிற்றிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பேன் நான். தாய் கர்ப்ப காலத்தில் புத்தகம் வாசிப்பதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தை வாசிப்பை கேட்பதுடன், அந்த வாசிப்பில் அடங்கியுள்ள கருத்து, கொள்கை, நிகழ்வுகள், சுவை, கதாபாத்திரங்களின் பண்பு, ஒழுக்க நெறி, அன்பு, சோகம் ஆகிய அனைத்தையும் உணர்ந்து அறிவில் சிறந்த குழந்தையாக மட்டுமல்லாமல் தனி திறன் மிக்க குழந்தையாகவும் பிறந்து, இவ்வுலகில் சாதிக்க முடியும்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அறிவு வளர்ச்சியும் கூடத்தான். அறிவு பரவலாக நூலகம் மிக அவசியம். நூலகத்தில் கவனம் செலுத்துகிற அரசு மக்களுக்கு நன்மை புரியும் அரசாக விளங்க முடியும்.
வீடுதோறும் நூலகம் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா
அவர்
வாக்கிங்கிணங்க நம்மால் இயன்ற நூல்களை வாங்கி அதனை பாதுகாத்து படித்து நாம் பயன் பெறுவதோடு அடுத்தவருக்கும் அந்நூலினை கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நூலகப் பரிணாம வளர்ச்சி இன்று ஆல்போல் வளர்ந்து கற்பக விருட்சமாக மாறிவிட்டது. தொழில் நுட்பங்கள், தகவல் நுட்பங்கள் நூலகத்துறையில் புகுந்து அரிய செயல்களை செய்து வருகிறது. நூலகத் தந்தை எஸ்;. ஆர். இரங்கநாதன் அவர்கள் கூறியதை போல் “The Library is a
growing organism” என்ற அவரின் ஐந்தாவது விதிப்படி வாசிப்பு என்பதும் வளர்ந்து கொண்டே செல்லும் ஒரு செயல். அது மனித சமுதாயம் உள்ள மட்டும் தொடரும்.
குறிப்புகள்:
1.
திருக்குறள், திருவள்ளுவர்
2.
நன்றி - முகநூல்
3.
'இன்றைய நூலகங்களில் தகவல் தொழில் நுட்பம்', டாக்டர். ஏ.லாறன்ஸ் மேரி, நூலகர், பி.எல்.பி. பதிப்பகம், 2005.
4.
www.ta.wikipedia.org
5.
www.thuruvam.blogspot.in
6.
www.blog.balabharathi.net
7.
http://tamil.thehindu.com
8.
http://chittarkottai.com
9.
http://srilankamuslims.lk
10. http://eluthu.com
11. https://bahasatamilupsr.wordpress.com
12.
http://www.thagaval.net
No comments:
Post a Comment